Sunday, November 11, 2007

திருவண்ணாமலை தீபம்

கார்த்திகை மாதம் பௌர்ணமியன்று சந்திரன் கிருத்திகை நட்சத்திரத்திலிருக்கும் போது கார்த்திகை விழா கொண்டாடப்படுகிறது. பஞ்சபூதங்களான நிலம், நீர், தீ, காற்று, வானம் இவைகளால் ஆனதே பிரபஞ்சம். அவற்றுள் நெருப்பை வழிபடுவதுதான் தீபத் திருவிழா.

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்படுவது இக்கார்த்திகை மாதத்தில்தான். தீபத் திருவிழா என்றதுமே நம் நினைவில் வந்து நிற்பது திருவண்ணாமலை திருத்தலம்தான். திருவண்ணாமலை கார்த்திகை தீபம் தமிழ்நாட்டில் நடைபெறும் மிகப் பெரிய உற்சவங்களில் ஒன்று. இவ்விழா பதினேழு நாட்களுக்கு பிரம்மோற்சவமாகக் கொண்டாடப்படுகிறது.

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்தின்போது முறையே முதல் மூன்று நாட்கள் எல்லைப் பிடாரி, துர்க்கை, விநாயகர் ஆகியவர்களுக்கான விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

மேலும் இந்த மூன்று நாட்களில் ஐயனார், சப்தமாதர்கள் எல்லைத் தேவதைகள் ஆகியவர்களுக்கும் சிறப்பு வழிபாடு நடைபெறும்.

பின்னர் கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கும் இவ்விழா 10 நாட்களுக்குச் சிறப்பாக நடைபெறும். இந்த 10 நாட்களும் விதவிதமான அலங்காரங்களுடனும், மேளம், நாதஸ்வரம், துந்துபி போன்ற இன்னிசைக் கருவிகள் முழங்கவும் சைவத் திருமறைப் பாடல்கள் ஒலிக்கவும் வெவ்வேறு வாகனங்களில் அண்ணாமலையார் வலம் வருவார்.

ஜோதி வடிவில் பெருமாள் :

காஞ்சிபுரம், திருத்தண்கா (தூப்புல்) என்ற திவ்ய தேசத்தில் சேவை சாதிக்கின்றவர் தீபப் பிரகாசர் - விளக்கொளிப் பெருமாள்.

ஒரு முறை சரஸ்வதிக்குத் தெரியாமல் பிரமன் யாகம் நடத்தினான். இதை அறிந்த சரஸ்வதி, மாயநலன் என்ற அரக்கனின் துணையுடன் அந்த யாகத்தை அழிக்க முயன்றாள்.

மாயநலன், யாகத்தை அழிக்க உலகம் முழுவதையும் இருட்டாக்கினான். பிரமன் திருமாலின் துணையை வேண்டினான். திருமாலும் ஒரு பேரொளியாகத் தோன்றினார். இருளை அகற்றினார். எனவே, திருமாலுக்குத் தீபப் பிரகாசர் என்ற பெயர் தோன்றிற்று. இப்படி ஜோதி வடிவில் தோன்றிய பெருமாளை தீப உருவில் வைணவர்கள் வணங்குவர்.

அண்ணாமலையார் எழுந்தருளும் வாகனங்கள் :

முதல் நாள் -------- அதிகார நந்தி
இரண்டாம் நாள் ---- வெள்ளி இந்திர விமானம்
மூன்றாம் நாள் ----- சிம்ம வாகனம்
நான்காம் நாள் ----- கற்பக விருட்சம்
ஐந்தாம் நாள் ------ வெள்ளி ரிஷப வாகனம்
ஆறாம் நாள் ------ வெள்ளிரதம்
ஏழாம் நாள் ------- மகாரதம் (மரத்தேர்)
எட்டாம் நாள் ------ குதிரை வாகனம்
ஒன்பதாம் நாள் ---- கைலாச வாகனம்
பத்தாம் நாள் ------ தங்க ரிஷபம்

முக்கிய விழாவான தீபத் திருநாள் பத்தாம் நாள் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அதிகாலையில் நான்கு மணிக்கே திருவண்ணாமலைக் கோயிலில் பரணி தீப தரிசனம் காட்டப்படும். அண்ணாமலையின் திருச்சன்னதியில் தீபம் ஏற்றப்பட்டு, அந்த தீபம் கோயிலிலுள்ள பிற தேவதைகளின் சன்னதிக்கும் எடுத்துச் செல்லப்பட்டு அந்தச் சன்னதிகளில் ஏற்றப்படும். பின்னர் அந்த எல்லா தீபங்களும் மீண்டும் ஒன்று சேர்க்கப்படும். "ஒரே பரம்பொருள் பலவாய்த் தோன்றி மீண்டும் ஒன்றாகிறது" எனும் தத்துவத்தை இந்நிகழ்ச்சி விளக்குகிறது.


இந்த பரணி தீபத்திலிருந்து தீப்பந்தம் ஏற்றப்பட்டு, பிறகு அதுமுறையான பூஜைக்குப் பின் மலையுச்சிக்கு எடுத்துச் செல்லப்படும். மலையின் மீது ஏறிச் செல்வதற்குச் சரியான பாதை இல்லை என்றாலும் தீபத்துக்குத் தேவையான பொருட்கள் குறிப்பிட்டவர்களால் மலையுச்சிக்கு எடுத்துச் செல்லப்படும்.

மலையுச்சியில் பகல் 2 மணி முதல் தீபம் ஏற்றுவதற்கான ஆரம்ப வேலைகள் துவங்கி விடும். முதலில் கொப்பரை நிறுத்தப்பட்டு அதில் துணித்திரி, நெய், கற்பூரம் ஆகியவை இட்டு நிரப்பப்படும். அன்று மாலை 6 மணிக்கு தீப தரிசன மண்டபத்தில் அண்ணாமலையாருக்கு தீப ஆரத்தி காட்டி, அதை உயரத் தூக்கிப் பிடிப்பார்கள். அந்த தீபத்தைக் கண்டதும் மலையுச்சியில் தீபம் ஏற்றுவார்கள். மலையின் மேல் தீப தரிசன ஜோதியைக் கண்டதும் கோயிலுக்குள் தீப தரிசன மண்டபத்துக்கு எதிரில் அர்த்தநாரீஸ்வரர் வலம் வருவார். இக்கோயிலிலுள்ள அர்த்தநாரீஸ்வரர் இந்த ஒருநாள் மட்டுமே வெளியே வருகிறார்.

மலையில் தீபம் ஏற்றப்பட்டதும் மக்கள், "அண்ணாமலையானுக்கு அரோகரா" என விண்ணதிர முழக்கமிடுவார்கள். "இந்த உடம்பு நான் என்னும் எண்ணத்தை அழித்து, மனதை ஆன்மாவில் அழித்து, உள்முகத்தால் அத்வைத ஆன்ம ஜோதியைக் காண்பதுதான் இந்த தீப தரிசனம் ஆகும்" என ரமண மகரிஷிகள் குறிப்பிடுகிறார்.

தீப தரிசனம் பிறவிப் பிணியை அறுக்க வல்லது என்பது ஐதீகம். தீப தரிசனத்துக்குப் பின்பு அண்ணாமலையார் தங்க ரிஷப வாகனத்தில் மாட வீதிகளில் வலம் வருவார்.

பதிமூன்றாம் நாள் அண்ணாமலையார் தெப்போற்சவம் நடைபெறும். பதினான்காம் நாள் அண்ணாமலையார் கிரிவலம் செய்வார். பின்னர் பதினைந்தாம், பதினாறாம் நாட்களில் முறையே அம்பிகைக்கும் முருகனுக்கும் தெப்போற்சவம் நடைபெறும்.

கடைசி நாளான பதினேழாம் நாள் சண்டிகேசுவரர் உற்சவத்துடன் கார்த்திகை தீப விழா நிறைவு பெறுகிறது.

No comments: