Sunday, November 11, 2007

திருவாண்ணாமலை கார்த்திகை தீபம்

திருவாண்ணாமலை கார்த்திகை தீபம் 15-ம் தேதி கொடியேற்றம்

கார்த்திகை தீபம் வரும் 24ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா வருகிற 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பல்வேறு நடவடிக்கைகள் செய்யப்பட்டு வருகின்றன. தீபத் திருவிழாவில் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தீபத் திருவிழாவையொட்டி வருகிற 15-ந் தேதி காலை 8 மணி முதல் 9 மணிக்குள் அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது.

அன்று முதல் 10 நாட்கள் தொடர்ந்து திருவிழா நடக்கிறது. முதல் நாள் கொடியேற்றம் முடிந்ததும் அன்று பகலில் விநாயகர், சந்திரசேகரர் ஆகிய சாமிகளும், இரவில் பஞ்ச மூர்த்திகள் வெள்ளி விமானங்களிலும் வீதி உலா நடக்கிறது.

தொடர்ந்து ஒவ்வொரு நாளும் காலை மற்றும் இரவில் பஞ்சமூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெறுகிறது.

கார்த்திகை தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகாதீபம் ஏற்றும் நிகழ்ச்சி 24-ந் தேதி நடக்கிறது. அன்று காலை 4 மணிக்கு சாமி சன்னதி முன்பு உள்ள அர்த்த மண்டபத்தில் பஞ்சமுக தீபம் ஏற்றப்பட்டு அதில் இருந்து பரணி தீபம் ஏற்றப்படுகிறது.

மாலை 6 மணிக்கு கோவில் பின்புரம் உள்ள 2668 அடி உயர மலை உச்சியில் ராட்சத கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.

கார்த்திகை மகா தீபத்தைக் காண வரும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, பாதுகாப்பு பணியில் 6 ஆயிரம் காவல்துறையினர் அமர்த்தப்பட உள்ளனர்.

No comments: